Saturday, 27 July 2013

உற்சாகம் தரும் கிரீன் டீ


டீ என்றால் எல்லோருக்கும் தெரியும். அது என்ன கிரீன் டீ?

பச்சைத் தேயிலையைத் தான் அப்படிச் சொல்கிறார்கள். இந்த பச்சைத் தேயிலையை அருந்தி வந்தால் நம் ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு குறைகிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக, ரத்தத்தில் உள்ள கொழுப்பு ரத்த நாளங்களில் தேங்கி ரத்த ஓட்டத்தில் தடைகளை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையும்போது ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. ரத்தம் சிக்கல் இன்றி எளிதில் செல்கிறது.

இதனால் ரத்தத்தை உடல் முழுக்க பம்பிங் செய்து அனுப்பும் இதயத்தின் வேலையை எளிமையாகிறது. அதனால், நாமும் நோய் நொடியின்றி வாழ முடிகிறது என்று விளக்கம் கொடுக்கிறார்கள், கிரீன் டீ ஆராய்ச்சியாளர்கள்.

சரி... இந்த கிரீன் டீயை எப்படித்தான் செய்ய வேண்டும் என்கிறீர்களா?

கொழுந்தாக இருக்கும் தேயிலையில் இருந்து கிடைக்கும் முதல் பிரிவை வெள்ளைத் தேயிலை என்பார்கள். அதை கொதிக்க வைத்தால் எந்த நிறமும் வராது. அதனால்தான் அதை வெள்ளைத் தேயிலை என்கிறார்கள்.

இதற்கு அடுத்த பிரிவுதான் பச்சைத் தேயிலை. அதாவது, கிரீன் டீ. இதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும்.

தினமும் கிரீன் டீ குடிப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் படு உற்சாகமாக செயலாற்றுகிறார்களாம்.

நீங்களும் முயற்சி செய்யலாமே... கிரீன் டீ குடிக்கத்தான்!

காமராஜருக்கு பிடிக்காத மலிவுப் பிரசாரம்



சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1953-56 ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவர் தேர்வு கட்டணம் 300 ரூபாய் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். யாரிடம் உதவிக் கேட்கலாம் என்று அவர் எண்ணியபோது, அப்போ
து தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவரின் நினைவுக்கு வந்தார். உடனே அவரைக் காண சென்றார்.

தமிழக மக்களின் கல்விக் கண்ணை திறந்தவர் ஆயிற்றே காமராஜர்?

சட்டென்று அந்த மாணவருக்கு உதவினார். தன்னைப் பெற்றத் தாய் 30 ரூபாய் கூடுதலாக கேட்டதற்கு தர மறுத்த அதே காமராஜர், தனது உதவியாளர் வைரவன் மூலம் சொந்தப் பணத்தில் இருந்து 300 ரூபாயைக் கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்ட மாணவர், “ஸார்... நீங்கள் எனக்கு செய்த இந்த உதவியை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தால், 'கல்லூரி மாணவருக்கு முதல்வர் உதவி' சென்று செய்தி போடுவார்கள். நான் அதைச் செய்யட்டுமா?” என்று கேட்டார்.

சட்டென்று கோபமான காமராஜர், “இந்த மலிவுப் பிரசாரம் எல்லாம் வேண்டாம். நீ படிக்க வேண்டியவன். நன்றாக படித்து குடும்பத்தைக் காப்பாற்று...” என்று கூறி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். பின்னாளில், அதே மாணவர் அரசுத் துறையில் பெரிய அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் பொங்கி வருவது எப்படி?


பாலில் கொழுப்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் தானே? பாலை கொதிக்க வைக்கும்போது இந்தக் கொழுப்புப் பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்கின்றன.

எண்ணெய் வகைகள் நீரில் மிதக்கும் என்பதால், இந்தக் கொழுப்புப் பொருட்களும் கொதிக் கின்ற பாலின் மேலே மிதக்க ஆரம்பிக்கின்றன. இதைத்தான் நாம் பாலாடை என்கிறோம்.

அதேநேரம், பாலில் உள்ள நீரும் கொதிக்கத் துவங்கி நீராவியாக மாறும். இந்த நீராவியானது, தன்னை வெளியேறவிடாமல் தடுக்கும்& பாலின் மீது படிந்திருக்கும் பாலாடையை வெளியே தள்ளுகிறது. இதைத்தான் நாம் 'பால் பொங்குகிறது' என்கிறோம்.

இப்போது புரிந்ததுதானே?