Tuesday, 31 December 2013

அழகான பற்கள் எல்லோருக்கும் சாத்தியம்தான்..! - டாக்டர் ஜி.திருப்பதி

ம் முகத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பவை பற்கள். அந்த பற்கள் துருத்திக்கொண்டோ அல்லது முன்னுக்குப்பின் முரணாக வரிசையின்றியோ இருந்தால் முகஅழகு குறைந்து போய்விடும். இப்படி, பற்களால் ஒருவரது அழகு குறைந்துபோக என்னக் காரணம், அதைத் தடுக்க முடியுமா?

இதோ... நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சென்னை சேலையூர் ஸ்ரீ ராகவேந்திரர் பல் மருத்துவமனையின் தலைவரும், பிரபல பல் மருத்துவருமான டாக்டர் ஜி.திருப்பதி.

ஒருவருக்கு பற்களின் அமைப்பு நிலைமாறியிருக்க என்னக் காரணம்?

ஒருவரது பற்கள் துருத்திக்கொண்டோ அல்லது சீரான வரிசையின்றியோ இருந்தால், அதற்கு அவரது பழக்கவழக்கம் அல்லது குடும்ப பாரம்பரியம் என்கிற ஜெனிடிக் காரணமாக இருக்கும். பழக்கவழக்கம் என்றால்... சிறு குழந்தையாக இருந்தபோது கைசூப்புதல், தூங்கும்போது வாயைத் திறந்துகொண்டே மூச்சுவிடுதல், அடிக்கடி நகம் கடித்தல், உதடு கடித்தல், அடிக்கடி நாக்கை வெளிப்புறமாக தள்ளிக்கொண்டிருத்தல் ஆகிய காரணங்களால் ஒருவருக்கு பல் துருத்திக்கொண்டோ அல்லது சீரான வரிசையின்றியோ போகலாம். ஜெனிடிக் காரணம் என்றால், சம்பந்தப்பட்டவரின் அப்பா அல்லது அம்மாவுக்கோ அல்லது அவர்களது அப்பா, அம்மாவுக்கோ அந்த பாதிப்புகள் இருந்திருந்தால், அந்தப் பாதிப்பு அடுத்தத் தலைமுறைக்கும் தொடரும்.

இந்த 2 காரணங்கள் தவிர வேறு காரணங்கள் கிடையாதா?


இருக்கிறது. முகத்தின் மேல் தாடை மற்றும் கீழ்த் தாடையில் வளர்ச்சி குறைபாடு இருந்தாலும், எலும்பு, மனம் சம்பந்தப்பட்ட நோய்கள், ஹார்மோன் குறைபாடு இருந்தாலும் அந்தப் பாதிப்புகள் ஏற்படும். உதாரணத்துக்கு, ஒருவருக்கு தொண்டை சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். அவர் தூங்கும்போது வாயை திறந்துகொண்டுதான் தூங்குவார். இந்த பாதிப்பு இருந்தால் காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கு மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. ஒருவருக்கு மேல் தாடை, கீழ்த்தாடையில் வளர்ச்சி குறைபாடு இருந்தால் சாப்பிடுவதற்கு சிரமமாக இருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி, சொத்தைப் பல் உருவாகும் வாய்ப்பை அதிகப்படுத்திவிடும்.

கை சூப்புதல் உள்ளிட்ட சில பழக்கவழக்கங்களை சில குழந்தைகள் வெகுநாட்களுக்குத் தொடர்கிறார்களே...  அவர்களை நம் வழிக்கு எப்படிக் கொண்டுவருவது?

மூன்றரை வயது வரை ஒரு குழந்தைக்கு அந்தப் பழக்கங்கள் இருப்பதில் தவறில்லை. அந்தப் பழக்கம், அதற்கு மேலும் தொடர்ந்தால்தான் பிரச்னை. இந்தப் பழக்கங்களால் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வரிசையில் பாதிப்பு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கிளிப் போட்டுக்கொள்ள வேண்டும்.

சரி, எந்த வயதில் இருந்து கிளிப் போடலாம்?

தாடைகளின் ஒழுங்கற்ற வளர்ச்சியால் ஒருவருக்கு பல் துருத்திக்கொண்டு இருந்தால், அதை சரிசெய்யும் பொருட்டு கிளிப் போட்டுக்கொள்ள சரியான வயது 7. பல் மட்டும்தான் பிரச்னை என்றால், 12 வயதில் கிளிப் போட்டுக்கொள்ளலாம். தற்போது, அட்வான்ஸ் டெக்னாலஜி வசதிகளால் பல் துருத்திக்கொண்டுள்ள எவரும், எந்த வயதிலும் அதை சரிசெய்யும்பொருட்டு கிளிப் மாட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் துருத்திக்கொண்டிருக்கும் பற்களை மட்டுமே சரிசெய்ய முடியும். தாடையில் பிரச்னை இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு வேறுமாதிரியான சிகிச்சை தேவைப்படும். பல் மட்டும்தான் பிரச்னை என்றால், இப்போது 50 வயதில்கூட கிளிப் போட்டுக்கொள்ளலாம்.

கிளிப் போட்டுக்கொண்டால் எவ்வளவு நாட்களில் பலன் கிடைக்கும்?

பல் மட்டும்தான் பிரச்னை என்றால் 12-18 மாதங்களில் சரியாகிவிடும். பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்றால் 2 முதல் இரண்டரை ஆண்டுகளில் சரியாகும்.

வெளியே தெரியாதபடி பற்களில் கிளிப் போட்டுக்கொள்ள முடியுமா?


கண்டிப்பாக முடியும். நிரந்தர கிளிப் அதற்கு உதவும். பற்களுக்கு உள்ளே மாட்டப்படும் இந்த கிளிப், சிரிக்கும்போது வெளியே தெரியாது. அதேநேரம், அதை சம்பந்தப்பட்டவர் கழற்றி எடுக்கவும் முடியாது. இப்போது பிக்ஸ்டு மெட்டல் கிளிப், சிராமிக் கிளிப், செல்ஃப் லிகேஷனல் சிராமிக் கிளிப், கேஸுவல் கிளிப் என்று பல்வேறு வகை கிளிப்கள் வந்துவிட்டன. இவற்றின் உதவியால், இடைவெளிவிட்டு பற்கள் அமைந்துள்ள பிரச்னையை 5 மாதத்தில் சரிசெய்துவிடலாம். குழந்தைகளுக்கு வலியில்லாமல் மாட்டிக்கொள்ளும் கிளிப்களும் உள்ளன. இந்த கிளிப்பை குழந்தைகளுக்கு, அவர்கள் இரவில் தூங்கும்நேரத்தில் மட்டும் மாட்டிக்கொள்ளலாம். நாங்கள் கடந்த 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பேருக்கு கிளிப் மூலம் பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை போக்கி இருக்கிறோம்.

0 comments:

Post a Comment