Saturday, 31 August 2013

தங்கம் ரூ.30 ஆயிரத்தை தொடும்?


ல்லோரும் விரும்பும் தங்கம் கடந்த சில ஆண்டுகளாக  விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துவருகிறது. இந்த மாதம் ரூ. 24 ஆயிரத்தைத் தாண்டி நடுத்தர மக்களையும் ஏழைகளையும் ஆட்டம் காணவைத்த தங்கம், இன்னும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தங்கத்தில் முதலீடு செய்வதை தவிருங்கள்' என்று நம் அரசாங்கமே கேட்டுக்கொண்டாலும், தங்கம் மீதான மோகம் யாரிடமும் இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, உயர் நடுத்தர வர்க்கத்தினரும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரும் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். இவர்களில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களும், 'அய்யய்யோ... அடுத்த மாதம் கிராமுக்கு 500 ரூபாய் கூடிவிடப் போகிறது' என்று பயந்து, தங்கம் வாங்குவோரும்தான் அதிகம்.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி காரணமாக ரூ.23 ஆயிரத்தை சுலபமாக தாண்டிய தங்கம், அடுத்துவரும் நாட்களில் இன்னும் வேகமாக விலையேற்றம் காணும் என்கிறார்கள் நகை வியாபாரிகள். இந்த ஆண்டின் நிறைவுக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டிவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை இப்படியே போனால், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தைத் தாண்டி விற்கப்படலாம்.

உத்தரவாதமுள்ள மிகச்சிறந்த சேமிப்புக்கும், பெண்களின் அத்தியாவசிய தேவைக்கும் தங்கம் அவசியமாக இருக்கும் வரையில், தங்கத்தின் விலையேற்றம் ஒரு தொடர்கதைதான். தங்கத்தின் மீதான மக்களின் மோகம் குறைய வேண்டும். தங்கம் தவிர்த்த, பிற வழிகளிலான மக்களின் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் தங்கத்தின் விலையேற்றத்துக்கு நாம் கடிவாளம் போடமுடியும்.

0 comments:

Post a Comment