- சுப்பு -
மங்கல வாத்தியங்கள் முழங்க, நாட்டியப் பெண்களின் சலங்கை ஒலிக்க, பட்டத்து யானை முன்னே வரும். அந்த யானையின் துதிக்கையில் ஒரு மாலை இருக்கும். அரியாசனத்தில் ஏறப்போவது யார் என்பதை தெரிந்துகொள்வதற்காக மக்களும் கூட்டம் கூட்டமாக கூடவே வருவார்கள். ஊருக்குப் புதிதாக வந்திருக் கும் இளைஞனின் கழுத்தில் யானை போடும் மாலை விழும். அவன் அரசனாகி விடுவான்.
இதெல்லாம் நாம் படித்த கதைகளில் வரும் காட்சிகள். இப்போது இதெல்லாம் சாத்தியமில்லை. இது ஜன நாயக யுகம். கடைக்கோடி மனிதனுக்கும் வாக்குரிமை கொடுத்திருக்கும் காந்தி நாடு இது. இதில், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராகப் போகிறவர் யார்?
மோடியா? ராகுலா?
தொலைக்காட்சி விவாதங் களிலும், குடும்பங்களின் சந்திப்புகளிலும், கல்லூரி வளாகங்களிலும், காதலர் களின் அலைபேசியிலும், வயதானவர்களின் வருத்தங் களிலும் அதிகமாக அலசப் படுவது ஒன்றுதான். யார் பிரதமர்? நரேந்திரமோடியா, ராகுல்காந்தியா என்பதுதான்.
மோடிக்குதான் 'முடி சூட்டல்' என்று சொல்பவர் கள் குஜராத் மாநிலம் அடைந்துள்ள வளர்ச்சியையும், சீரான நிர்வாகத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். குஜராத் தில் மின்வெட்டு என்பதோ, மின்தடை என்பதோ இல்லாத விஷயம். குஜராத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் உபரியாக மற்ற மாநிலங்களுக்குத் தரப் படுகிறது. சூரியஒளியைப் பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் தயாரி க்கும் திட்டம் அங்கே உள்ளது. இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரமாக காந்திநகர் ஆகப் போகிறது என்று அவர்கள் பெருமை பேசுகிறார்கள்.
ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நேரு குடும்பத்தாரின் தியாகத்தை முன்னிறுத்திப் பேசுகிறார்கள். விடுதலைப் போரில் ஜவஹர்லால்நேருவும், அவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்திக்கொண்ட இழப்புகளையும், அனுபவித்த சிறைவாசங்களையும் பற்றிச் சொல்கிறார்கள். இந்திராகாந்தி கொல்லப்பட்டதையும், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப் பட்டதையும் அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்புகளால் நடந்த தேர்தல் களை எந்தவித தலையீடும் சிபாரிசும் இல்லாமல் ராகுல் நடத்தினார் என்று அவர்கள் அடித்துப் பேசுகிறார்கள். அதோடு, ராகுல்காந்தி இளைஞர்களின் எழுச்சியை பிரதிபலிக் கிறார், ஏழைகளின் குடிசைகளில் பிரவேசிக்கிறார் என்றும் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
குற்றச்சாட்டு
மோடி மீது அடிக்கடி சொல்லப்படும் குற்றச்சாட்டு 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரங்களைப் பற்றியதுதான். அங்கே முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது மோடியின் போலீஸ் வேடிக்கை பார்த்தது என்பது ஒரு குற்றச்சாட்டு. ஆனால், இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய் வுக்குழு, மோடிமீது குற்றம்சுமத்த எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லிவிட்டது.
ராகுல்காந்தி மீது பெரிய அளவில் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், அந்தக் கட்சியும் செய்திருக்கும் ஊழல்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ராகுல்காந்தியின் செயல்பாடு இன்னமும் பொதுத் தளத்தில் சோதிக்கப்படவில்லை. ஆடத் துவங்கி இருக்கும் அவரை, அதிகாரத்தின் உச்சகட்டத்தில் உட்கார வைக்க வேண்டுமா என்பது நியாயமான கேள்விதான்.
கருத்துக்கணிப்பு மோடிக்கு சாதகம்
தி வீக் ஆங்கில வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பு மோடி பிரதமராக வேண்டும் என்று 32 சதவீத மக்கள் விரும்புவதாகவும், ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று 13 சதவீத மக்களே விரும்புவதாகவும் தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் மோடி யார்? ராகுல்காந்தி யார்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மோடியின் வயது 62. பிரம்மச்சாரி. பம்பாய் மாநிலத்தில் மெஹ்பொரு மாவட்டத்தில் இருந்த வத் நகர்தான் மோடியின் சொந்த ஊர். தந்தை தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி. தாய் ஹீரா சென். உள்ளூர் பஸ் நிலையத்தில் மோடியும், அவருடைய சகோதரரும் ஒரு டீக்கடை நடத்தினார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மோடி, நெருக்கடி நிலை காலத்தில் தீவிரமாக செயல்பட்டார். மோடி பா.ஜ.க.வில் சேர்ந்தது 1987-ல். குஜராத்தில் 1995-ல் நடந்த தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றியில் மோடியின் பங்கு கணிசமானது.
அக். 7. 2001, மோடி குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இப்போது நான்காவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கிறார். மோடியின் பிளஸ் பாயின்ட் வெகுஜன ஆதரவு. குறிப்பாக, படித்த இளைஞர்களின் ஆதரவு இவருக்கு நிறையவே இருக்கிறது. சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் மோடியை பின்தொடர்பவர்கள் பல லட்சம்பேர். இவரது ஒரே மைனஸ் பாயின்ட் மீடியா. குறிப்பாக, ஆங்கில மீடியா.
இந்திய ஜனநாயகத்தின் கடந்தகாலத் தேர்தல் முடிவுகளை அறிந்தவர்களுக்கு இது நல்ல செய்தியாகத்தான் ஒலிக்கிறது. மக்களின் விருப்பம் கிழக்கு முகமாக இருந்தால் ஆங்கில மீடியா மேற்கு முகமாக இருக்க வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம். ஆகவே, மோடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றன.
இவர்தான் ராகுல்
ராகுலின் வயது 43. இவரும் பிரம்மச்சாரிதான். அதாவது, இன்னும் திருமணமாகவில்லை. வெனிசூலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு நட்புறவாக இருக்கிறார். ராகுல் பிறந்தது புது தில்லியில். தந்தை ராஜீவ்காந்தி, தாய் சோனியாகாந்தி. லண்டனில் உயர்கல்வி படித்த ராகுல், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டவுடன் (1991) அரசியலில் நுழைந்தார்.
2004 தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜனவரி 2013 முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருக்கிறார்.
சாதாரணமாக, நாம் முடிதிருத்தப்போகும்போதுகூட நம் தலையை புதிதாகத் தொழிலை கற்றுக்கொள்பவரிடம் கொடுக்கத் தயங்குகிறோம். தலைமுடியைக் கொடுப்பதற்கே யோசிக்கும் நாம், நாட்டின் தலைவிதியை எழுதுவது யார் என்ற விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.



1 comments:
superb... good subbu sir...
Post a Comment